ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஈராண்டுகளுக்குப் பின்னர் தேசிய தினத்தை மக்கள் குதூகலத்துடன் கொண்டாடினர்

ஷா ஆலம், ஆக 31- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகள் எந்தவொரு பொது நிகழ்வும் நடத்தப்படாமலிருந்த நிலையில் இவ்வாண்டு தேசிய தினத்தை மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும் குதூகலத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த தேசிய தினக் கொண்டாட்டத்தில் இடம் பெற்ற சீருடை அணிவகுப்பு மற்றும் மெர்டேக்கா முழக்கம் ஆகியவை தங்களுக்கு பெருத்த மகிழ்ச்சியைத் தந்ததாக அவர்கள் உவகைப் பொங்க கூறினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளி மாணவரான முகமது ரிஜாலுடின் ஜமாலுடின் (வயது 19) கூறுகையில், ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் சக்கர நாற்காலியை கைகளால் தள்ளிக் கொண்டு வந்ததால் ஏற்பட்ட களைப்பு அணிவகுப்பு நிகழ்வைக் கண்டதும் பனி போல் மறைந்து போனதாக சொன்னார்.

ஒவ்வோராண்டும் இந்த நிகழ்வுக்கு வந்து விடுவேன். கடந்த ஈராண்டுகளாக இந்நிகழ்வு நடைபெறாமலிருந்த நிலையில் இம்முறை எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். இவ்விழா கொண்டாடப்படாத போது ஆகஸ்டு 31 ஆம் தேதி ஏதோ ஒன்றை இழந்து விட்டதைப் போன்ற உணர்வு ஏற்படும் என்றார் அவர்.

சுதந்திர தின உணர்வை அனுபவிப்பதற்காக தனது மூன்று வயது மற்றும் ஒரு வயது பிள்ளைகளுடன் இந்நிகழ்வுக்கு வந்ததாக பொருள் விநியோகிப்பாளரான ஜக்காரியா அபு காசிம் (வயது 35) கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் இந்த அரிய நிகழ்வை காணும் வாய்ப்பினை என் பிள்ளைகள் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக கோழி மற்றும் முட்டை 5.00 வெள்ளி விலையில் விற்கப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

 

 

 


Pengarang :