ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

ரோஸ்மாவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு

கோலாலம்பூர், ஆக 31- சரவா மாநிலத்திலுள்ள 369 புறநகர்ப் பள்ளிகளுக்கு சோலார் ஹைப்ரிட் எனப்படும் சூரிய ஒளியீர்ப்பு தகடுகளைப் பொருத்தும் குத்தகை தொடர்பில் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் தலைவிதி நாளை தெரிந்து விடும்.

கிட்டத்தட்ட ஓராண்டு கால விசாரணைக்குப் பின்னர் இங்குள்ள உயர் நீதிமன்றம் நாளை இவ்வழக்கு மீதான தீர்ப்பை வழங்கவுள்ளது. நீதிபதி முகமது ஜைனி மஸ்லான் நாளை காலை 9.00 மணிக்கு தனது தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், கடைசி நேர முயற்சியாக இந்த வழக்கை நடத்துவதிலிருந்தும் தீர்ப்பை வழங்குவதிலிருந்தும் நீதிபதியை விலகக் கோரும் மனுவை ரோஸ்மா தாக்கல் செய்துள்ளார்.

இம்மாதம் 26 ஆம் தேதி அனைத்து பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்ட வேறு தரப்பினரால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வழக்கின் தீர்ப்பின் நகல் அம்பலமானதை  அடிப்படையாக கொண்டு இந்த மனுவை ரோஸ்மா தரப்பு நேற்று தாக்கல் செய்தது.

நாளை நீதிமன்றம் கூடும் போது மனு முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சைடி அபாங் சம்சுடினிடமிருந்து 18 கோடியே 75 லட்சம் வெள்ளியை பெற்றதாக ஒரு குற்றச்சாட்டையும் அவரிடமிருந்து மேலும் 65 லட்சம் வெள்ளியைப் பெற்றதாக இரு குற்றச்சாட்டுகளையும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா (வயது 70) எதிர்நோக்கியுள்ளார்.

அரசுத் தரப்பில் மூத்த துணை பப்ளிக் புரோசிகியூட்டர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் இந்த வழக்கை நடத்தும் வேளையில் ரோஸ்மாவை பிரதிநிதித்து டத்தோ அக்பர்டீன் அப்துல் காடீர் மற்றும் டத்தோ ஜக்ஜிட் சிங் ஆகியோர் ஆஜராகின்றனர்.


Pengarang :