ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மோரிப் தொகுதியைச் சேர்ந்த 400 பேர் மாதம் 300 வெள்ளி உதவிக்கான கார்டுகளை பெறுவர்

கோல  லங்காட், செப் 4- சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் (பிங்காஸ்) மூலம் மோரிப் தொகுதியைச் சேர்ந்த சுமார் 400 பேர் ஆண்டுக்கு 3,600 வெள்ளி  உதவிக்கான கார்டுகளை பெறுவர்.

இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு தகுதி உள்ள 280 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்தாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.

அவர்கள் அனைவரும் சிலாங்கூர் விவேக அன்னையர் பரிவுத் திட்டம் (கிஸ்) மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான உதவித் திட்டம் (கிஸ் ஐ.டி.) ஆகியவற்றின் மூலம் ஏற்கனவே உதவிப் பெற்று வந்தவர்களாவர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பிங்காஸ் திட்டத்திற்கான பதிவு கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கப்பட்டது முதல் இதுவரை 800க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம். எனினும், கோட்டா பிரகாரம் மோரிப் தொகுதியில் 386 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்றார் அவர்.

அதிகமானோருக்கு உதவி தேவைப்படுவதால் மோரிப் தொகுதியில் மேலும் கூடுதலானோருக்கு இத்திட்டத்தில் வாய்ப்பளிக்கும்படி மாநில அரசை தாங்கள் கேட்டுக் கொள்ளவுள்ளதாக அவர் சொன்னார்.

மொத்தம் 10 கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் கடந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிங்காஸ் திட்டத்தின் மூலம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Pengarang :