ECONOMYSELANGOR

கோல சிலாங்கூரில் மீன்பிடி போட்டி- 266 பேர் பங்கேற்பு

ஷா ஆலம் செப் 6- கோல சிலாங்கூர்,  கம்போங் தஞ்சோங் சியாம் பாருவில் உள்ள சுங்கை சிலாங்கூர் அலியோட் படகுத் துறையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற  மீன்பிடி போட்டியில் மொத்தம் 266 பேர் கலந்து கொண்டனர்.

பல்வேறு பிரிவுகள் கொண்ட இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்தப் பரிசு 3,600 வெள்ளியாகும் என்று டீம் சிலாங்கூர்
செயலகத்தின் தலைவர் சியாஹைசெல் கெமன் கூறினார்.

கனமான இறால், கனமான முட்டை இறால், கனமான மீன் மற்றும் விநோத உயிரினம் ஆகியவை அந்தப் பிரிவுகளில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் ஹெம்பர்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதுதவிர, 2,950 வெள்ளி மதிப்புள்ள பரிசுகளை அதிர்ஷ்டக் குலுக்கல் வாயிலாக வெல்வதற்குரிய வாய்ப்பும் வழங்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கு  எம்.பி.ஐ.  எனப்படும் மந்திரி புசார் ஒருங்கிணைக்கப்பட்ட கழகம், கம்போங் தஞ்சோங் சியாம் பாரு  பிரதிநிதித்துவ மன்றம் மற்றும்  டீம் சிலாங்கூர் ஆகியவை ஏற்பாட்டு ஆதரவு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார் என்றார் அவர்.


Pengarang :