ECONOMYSELANGOR

எம்.ஆர்.டி.3 புதிய வழித்தடம் மீதான பரிந்துரை எம்டெஸ் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்- மந்திரி புசார்

ஷா ஆலம், செப் 6- எம்.ஆர்.டி.3 இலகு இரயில் திட்டத்திற்கான புதிய வழித் தடம் தொடர்பான எந்தப் பரிந்துரையும் மாநில அரசின் பொருளாதார திட்டமிடல் பிரிவிடம் (எம்டெஸ்) தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று மந்திரி புசார் வலியுறுத்தியுள்ளார்.

அந்த இரயில் தடம் 90 வீடுகளைப் பாதிக்கக்கூடிய வகையில் அம்பாங், தாமான் கெஞ்சானா வழியாக அமைக்கப்படவுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள காரணத்தால் மாநில அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் முன்கூட்டியே மாநில அரசுடன் விவாதிக்க வேண்டும். நில ஆர்ஜிதம் சம்பந்தப்பட்ட விவகாரம் மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டதாகும். ஆகவே, இந்த விவகாரத்தை மாநில பொருளதார நடவடிக்கை மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்று அந்த உத்தேச புதிய தடத்தினால் ஏற்படும் விளைவுகளை ஆராயவுள்ளோம் என்றார் அவர்.

தங்களிடம் தெரிவிக்காமல் புதிய வழித்தடத்தில் இந்த இரயில் தண்டவாளத் திட்டத்தை மேற்கொள்ளும் பரிந்துரை தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொது அடிப்படை வசதிகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் அண்மையில் கூறியிருந்தார்.

முன்னதாக, எம்.ஆர்.டி.3 திட்டத்திற்காக தங்கள் வீடமைப்பு பகுதியை பயன்படுத்தும் முடிவை மறுஆய்வு செய்யும்படி தாமான் கெஞ்சானா குடியிருப்பாளர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.


Pengarang :