ECONOMYMEDIA STATEMENT

அங்கீகாரம் பெறாத 7,000 மின்னியல் சாதனங்கள் பெட்டாலிங் ஜெயாவில் பறிமுதல்

டிங்கில், செப் 9– முறையான அங்கீகாரம் இல்லாத மற்றும் இறக்குமதி அனுமதி பெறாத 46 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 7,000 மின்சார மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களை மலேசிய சுங்கத் துறை பறிமுதல் செய்தது.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள இரு கிடங்குகளில் கடந்த மாதம் 26 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறையின் அமலாக்க மற்றும் கண்காணிப்புப் பிரிவுத் துணைத் தலைமை இயக்குநர் வான் சஹாடா முகமது முஹிபுடின் கூறினார்.

இந்த மின்னியல் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் யாவும் எழுது பொருள்கள் என்ற போர்வையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இறக்குமதி வரி மற்றும் விற்பனை வரியை செலுத்துவதை தவிர்ப்பதற்காக அவர்கள் போலியான தகவல்களை இறக்குமதி பிரகடனத்தில்  வழங்கியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருள்களுக்கான இறக்குமதியின் வரியின் மதிப்பு 550,000 வெள்ளியாகும் என்று டிங்கிலில் உள்ள சுங்கத் துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

முறையான அனுமதி பெறாத 2,755 மின்சாரப் பொருள்களும் 4,702  தொலைத் தொடர்பு சாதனங்களும் இந்நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டவில்லை எனக் கூறிய அவர், அப்பொருள்களை நாட்டிற்குள் தருவித்த தரப்பினரை தமது தரப்பு அறிந்துள்ளது என்றார்.

பொதுவான பொருள்களை சேமித்து வைக்கும் இடமாக இந்த கிடங்கு கடந்த 2020 முதல் செயல்பட்டு வந்துள்ளது. இதன் உரிமையாளர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :