ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டத்தின்ஸ்ரீயிடம் வெ. 150,000 மோசடி செய்ததாக வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப் 9- ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய நிதி முதலீட்டுத் திட்டத்தில் டத்தின்ஸ்ரீ ஒருவரை ஏமாற்றியதாக வர்த்தகருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி டத்தின் சபரியா ஓத்மான் முன்னிலையில் தமக்கெதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை 30 வயதான கெல்வின் டேமியன் ஓங் என்ற அந்த வர்த்தகர் மறுத்து விசாரணை கோரினார்.

பப்ளிக் மியூச்சுவல் நிதி முதலீட்டுத் திட்டம் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என டத்தின்ஸ்ரீ அலாவுயா ஜாபர் (வயது 58) என்ற அப்பெண்மணியை நம்ப வைத்து அப்பெண்மணியிடமிருந்து 150,000 வெள்ளிக்கான காசோலையை தனது நிறுவனத்தின் பெயரில் பெற்றுள்ளார் என கெல்வினுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு 7.00 மணியளவில் பேரங்காடி ஒன்றின் உணவகத்தில் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 25,000 வெள்ளி ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம் இந்த வழக்கின் மறு செவிமடுப்பை வரும் அக்டோபர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


Pengarang :