ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அரசுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்- டோமி தோமஸ் மீதான வழக்கைத் தொடர்கிறார்

கோலாலம்பூர், செப் 9- 1எம்டிபி எனப்படும் 1 மலேசியா டெவலெப்மெண்ட் பெர்ஹாட் உள்பட பல்வேறு வழக்குகளில் தம்மை சிக்க வைத்ததன் மூலம் அதிகாரத்துஷ்பிரயோகம் செய்ததாக அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்த குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீட்டுக் கொண்டுள்ளார்.

எனினும், இந்த வழக்கில் முதல் பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டுள்ள முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டான் ஸ்ரீ டோமி தோமஸூக்கு எதிரான வழக்கை அவர் தொடர்ந்து நடத்தவிருக்கிறார்.

இன்றைய விசாரணையின் போது  இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாக  குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் பெயரை தமது கட்சிக்காரர் மீட்டுக் கொள்வதாக நஜிப்பின் வழக்கறிஞர் டத்தோ பைருஸ் ஹூசேன் அகமது ஜமாலுடின் நீதிபதி டத்தோ அகமது பாச்சேவிடம் தெரிவித்தார்.

காஜாங் சிறைச்சாலையின் ஆறு பாதுகாவலர்கள் புடைசூழ 69 வயதான நஜிப் சாம்பல் நிற சூட் உடையில் நீதிமன்றம் வந்தார். அவரின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரும் நீதிமன்றம் வந்திருந்தார்.

தமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் அனைத்தும் தோமஸினால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் அப்போதைய பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் திட்டமும் இதுவே ஆகும் என்றும் கடந்த 2021 ஆம் ஆண்ட அக்டோபர் 22 ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

தோமஸ் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என நீதிமன்றம் பிரகடனப்படுத்த வேண்டும் என்பதோடு இந்த வழக்கிற்கு தேவையான ஆவணங்களைத் தயார் செய்வதற்கு உண்டான செலவு உள்பட 19 லட்சம் வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நஜிப் தனது மனுவில் கோரியுள்ளார்.


Pengarang :