ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

கடல் பெருக்கு காரணமாக கிள்ளான், கோல சிலாங்கூரில் 5.5 மீட்டர் வரை அலைகள் உயரும்

ஷா ஆலம், செப் 12- கடல் பெருக்கு காரணமாக கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் கடலோரப் பகுதிகளில் 5.5 மீட்டர் வரை அலைகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகப்பட்ச உயரத்திற்கு அலைகள் எழும் சம்பவங்கள் கோலக் கிள்ளான் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

கிள்ளானின் பல்வேறு பகுதிகளில் இன்று கடல் நீர் மட்டம் 5.4 மீட்டர் வரை உயர்ந்து காணப்பட்டது. மற்ற இடங்களில் மூன்று மீட்டர் வரை பதிவானது என மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் ஹபிஷாம் முகமது நோர் கூறினார்.

இந்த கடல் பெருக்கு காரணமாக வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் பொது மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்காக கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூரிலுள்ள 10 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 100 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து பொது மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டதோடு கடல் பெருக்கின் போது கடும் மழை பெய்யும் பட்சத்தில் விரைந்து வெளியேறும்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

கோல சிலாங்கூரில் இன்று மாலை 6.54 மணியளவில் 5.1 மீட்டர் வரை அலைகள் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக கோல சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவர் இஸ்மாயில் ஜக்காரியா தெரிவித்தார்.


Pengarang :