ECONOMYSELANGOR

மூத்த குடிமக்களுக்கு விவேக கைப்பேசியை பயன்படுத்தும் பயிற்சி- புக்கிட் காசிங் தொகுதி வழங்குகிறது

பெட்டாலிங் ஜெயா, செப் 19- புக்கிட் காசிங் தொகுதி சேவை மையம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் நடத்தி வரும் மூத்த குடிமக்களுக்கான விவேக கைப்பேசியை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சிகளில் இருபது பேர் வரை பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.

இயங்கலை வாயிலாக பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்குரிய வசதிகளைக் கொண்டுள்ள விவேக கைப்பேசியை முழுமையாக பயன்படுத்துவதற்குரிய ஆற்றலை அத்தரப்பினர் கொண்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த பயிற்சி வழங்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் கூறினார்.

ஒவ்வொரு வாரமும் 10 முதல் 20 பேர் வரை இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் விவேக கைபேசிகளை பயன்படுத்தத் தெரியாத மூத்த குடிமக்களாவர் என்றார் அவர்.

பல பணிகள் தற்போது இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படும் நிலையில் திறன்பேசியை முறையாக பயன்படுத்தத் தெரியாத காரணத்தால் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இந்த பயிற்சி அவர்களுக்கு பெரிதும் துணை புரியும் என நம்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதே சமயம், குறைந்த பட்சம் 100 வெள்ளி விலையில் திறன்பேசிகளை  தாங்கள் வழங்குவதாக கூறிய அவர், சிரமத்தில் உள்ளவர்களாக இருப்பின் அவர்களுக்கு இலவசமாகவே அந்த உபகரணங்களை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

உண்மையில் சிரமத்தை எதிர்நோக்குவோருக்கு கைபேசிகளை இலவசமாக வழங்குகிறோம். இதன் மூலம் அத்தரப்பினர் திறன்பேசி மூலம் கிடைக்கும் பலன்களை அனுபவிக்க முடியும் என அவர் சொன்னார்.


Pengarang :