ECONOMYMEDIA STATEMENT

கணவர் கொலையில் தொடர்பு- சந்தேகத்தின் பேரில் மனைவி கைது

கிள்ளான், செப் 20- தனது கணவரின் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக்  சந்தேகிக்கப்படும் ஒரு பெண் குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் இங்குள்ள சுங்கை ஊடாங், தாமான் அனேக்கா பாருவில் செப்டம்பர் 15 ஆம் தேதி  கைது செய்யப்பட்டார்.

தன் கணவரை பழி வாங்கும் நோக்கில் மற்ற நான்கு நபர்களுடன் சேர்ந்து அவரைக் கொல்ல அந்த 37 வயது பெண் சதித் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமது கூறினார்.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அதிகாலை 2.41 மணியளவில் ஒரு வீட்டில் கும்பல்களுக்கிடையே சண்டை நிகழ்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் கிடைக்கப் பெற்றதாக அவர் சொன்னார்.

அத்தகவலின் பேரில் போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு ஆடவர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடக்கக் காணப்பட்டார். அந்த இடத்திற்கு வந்த மருத்துவக் குழு, 41 வயதான உள்ளூர் நபர் இறந்து விட்டதை உறுதிப்படுத்தியது என்று அவர் தென் கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முகமூடி அணிந்த இருவர் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்ததாக அர்ஜுனாய்டி குறிப்பிட்டார்.

பி.எம்.டபிள்யூ. காரில் தப்பிச் செல்வதற்கு முன்பு கொள்ளையர்கள் வீட்டை சூறையாடி  விலைமதிப்புள்ள கைப்பைகள், நகைகள் மற்றும் 40,000 வெள்ளி ரொக்கப் பணத்தை எடுத்துச் சென்றதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார் என்றார் அவர்.

அந்த ஆடவர் உடலில் 14 முறைக்கு மேல் கூர்மையான பொருளால் குத்தப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது எனவும் அர்ஜுனைடி சொன்னார்.


Pengarang :