ECONOMYMEDIA STATEMENT

வெ.85 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்- எழுவர் கைது

கோலாலம்பூர், செப் 20- இங்குள்ள சிகாம்புட் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை நடத்திய சோதனையில் சுமார் 85.3 லட்சம் வெள்ளி மதிப்புள்ள  263.88 கிலோ ஷாபுவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அனைத்து போதைப்பொருள்களும் 226 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த குடியிருப்பில்  இருந்த ஒருவரை போலீசார் கைது செய்ததாகவும் கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் டத்தோ யஹாயா ஓத்மான்  கூறினார்.

இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை பல மாநிலங்களில் நடத்திய சோதனைகள் மூலம் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

பேராக்கில் மூன்று சந்தேக நபர்களும் பினாங்கில் இருவரும் மற்றும் சிலாங்கூரில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். 24 முதல் 47 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களைக் கொண்ட இந்த கும்பல் கடந்த ஜூலை முதல் செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.

அந்த  ஏழு பேரும்  1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் கடந்த குற்றப் பதிவுகள் கொண்டவர்கள் என்றும், பூர்வாங்க  சோதனையில் அவர்களில் ஐந்து பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது  என்றும் அவர் கூறினார்.

மொத்தம் 424,750 வெள்ளி மதிப்புள்ள டொயோட்டா அல்பார்ட், ஃபோர்டு ரேஞ்சர், பெரோடுவா ஆக்சியா மற்றும் பெரோடுவா பெஸ்ஸா ஆகிய நான்கு வாகனங்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :