ECONOMYMEDIA STATEMENT

மண் சரிவில் இருவர் புதையுண்ட சம்பவம்- மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணி தீவிரம்

ஈப்போ, செப் 21- இங்குள்ள குவாரி ஒன்றில் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மண் சரிவில் மண்வாரி இயந்திரத்துடன் புதையுண்ட இருவரில் ஒருவரின் சடலத்தை மோப்ப நாய் உதவியுடன் தேடும் நடவடிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த சம்பவத்தில்  புதையுண்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரின் எலும்புத் துண்டுகள், உடைகள் மற்றும் மண்வாரி இயந்திரத்தின் பகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் மற்றொரு நபரின் உடலைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பேரா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் முகமது ஷஹ்ரிசால் அரிஸ் கூறினார்.

ஜாலான் பூலாய்-கேமரன் ஹைலண்ட்ஸ் சாலையில் கிராமாட் பூலாய் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி ஏற்பட்ட மண் சரிவில் அவ்விரு நபர்களும் மண்வாரி இயந்திரத்துடன் புதையுண்டது என அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட இடத்தில் மண்வாரி இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் நேற்று காலை 10.20 மணியளவில் தாங்கள் பொது மக்களிடமிருந்து தகவலைப் பெற்றதாக அவர் சொன்னார்.

அந்த மண்வாரி இயந்திரத்தை மண் குவியலிருந்து மீட்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டோம். இந்த இயந்திரம் மீட்கப்பட்ட போது அதில் எலும்புகளும் இறந்தவரின் உடைகளும் காணப்பட்டன என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து 25 மீட்டர் பகுதியில் இரண்டாவது நபரின் உடலைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

தேடும் பணியை எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக அப்பகுதியிலுள்ள பெரிய கற்களை வெடிமருந்து கொண்டு தகர்க்கும் பணியை தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் எனினும், வானிலையைப் பொறுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :