ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் போலீசார் அதிரடி- இரு போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு

ஷா ஆலம்,  செப் 21- இம்மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் போதைப் பொருளை பதனிடும் மற்றும் விநியோகிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த இரு கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் ஐவர் கைது செய்யப்பட்டதோடு 2 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

கடந்த 13 ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் அம்பாங் மற்றும் பூச்சோங்கில் இரு ஆடவர்களை போலீசார் கைது செய்ததாக அவர் சொன்னார்.

அந்த ஆடவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இரவு 9.15 மணியளவில் ஸ்ரீ டாமன்சாராவிலுள்ள வீடொன்றைச் சோதனையிட்டு ஆடவன் ஒருவனைக் கைது செய்த போலீசார், அங்கிருந்து 43.48 கிலோ எடையுள்ள ஹெரோயின் என நம்பப்படும் 112 கட்டிகள் மற்றும் 89,500 போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்ட சிலாங்கூர் போலீசார் டாமன்சாரா பெர்டானா மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் போதைப் பொருள் பதனீட்டு மையங்களாக செயல்பட்டு வந்த வீடுகளை முற்றுகையிட்டனர் என்றார் அவர்.

அங்கு 134.19 கிலோ எடையுள்ள 355 ஹெரோயின் பொட்டலங்கள் 59.04 கிலோ எடையுள்ள 20 மெத்தம்பெத்தமின் போதைப் பொருள் கட்டிகள்15,830 எர்மின் 5 போதை மாத்திரைகள் உள்ளிட்ட  போதைப் பொருள்களைக் கைப்பற்றினர் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :