ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அரசியல் நிதியளிப்பு சட்ட மசோதா நவம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல்

கோலாலம்பூர், செப்.24 – அரசியல் நிதியளிப்பு மசோதா முதல் வாசிப்புக்கு வரும் நவம்பர் தொடக்கத்திலும் இரண்டாம் வாசிப்புக்கு அம்மாதத்தின் இறுதியிலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்றம் மற்றும் சட்டவிவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.

தேசிய ஆளுமை, நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு மையம் (ஜி...சி.சி.) மசோதாவில் கோடிட்டுக் காட்டியுள்ள அதன் நோக்கம் மற்றும் கொள்கை அளவுகள் இறுதி செய்யப்பட்டப் பின்னர் அது சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடம் தாக்கல் செய்யப்படும் என அவர் சொன்னார்.

அந்த அரசியல் நிதியளிப்பு சட்ட மசோதா தொடர்பான அம்சங்கள் மீது கருத்துகளைப் பெறுவதற்காக வரும் 28 ஆம் தேதி அனைத்து ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, ஜனநாயகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான கழகம் (ஐடியாஸ்), தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான கூட்டணி (பெர்சே) போன்ற அரசு சாரா அமைப்புகளுடன்  நடத்தப்படும் கலந்துரையாடல் அமர்வுகள் மூலம் பெறப்படும் கருத்துகளையும் இந்த மசோதா கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், இந்த மசோதாவின் வரைவு விவரம் குறித்து சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் பல உள் விவாத அமர்வுகள் நடத்தப்பட்டன  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அரசியல் நிதியுதவிக்கான தேசிய ஆலோசனைக் குழு ஸ்தாபனத்தின் மூலம் அரசியல் நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சி 2015 இல் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டது, ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை என்பதையும் வான் ஜுனைடி நினைவு கூர்ந்தார்.


Pengarang :