ECONOMYMEDIA STATEMENT

கூட்டணி அமைத்து கொள்ளையிட்ட சிறைச்சாலை நண்பர்கள்- போலீஸ் வலையில் வசமாகச் சிக்கினர்

ஷா ஆலம், செப் 27– சிறையில் தண்டனை அனுபவிக்கும் போது நண்பர்களான நால்வர் விடுதலையாகி வெளியே வந்த பிறகு வருமானத்திற்காக கூட்டணி அமைத்து கார்களைக் கொள்ளையிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும், இந்த கூட்டணியின் சட்டவிரோத நடவடிக்கைகள் நீண்டகாலத்திற்கு நீடிக்கவில்லை. கடந்த வாரம் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 27 முதல் 37 வயது வரையிலான அந்நால்வரும் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

இம்மாதம் 20 ஆம் தேதி பண்டார் பூச்சோங் ஜெயாவிலுள்ள உணவகம் ஒன்றின் எதிரே ஹோண்டா சிட்டி கார் ஒன்று திருடப்பட்டது தொடர்பில் தாங்கள் புகாரைப் பெற்றதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ. அன்பழகன் கூறினார்.

புரோட்டோன் பெசோனா ரகக் காரில் வந்த பாராங் கத்தியேந்திய நால்வர் காரிலிருந்து தம்மை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு அக்காருடன் தப்பியதாகவும் இதனால் தமக்கு 80,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் செய்திருந்ததாக அவர் சொன்னார்.

உளவு நடவடிக்கையின் வாயிலாக டாங் வாங்கி மற்றும் பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் நான்கு சந்தேகப் பேர்வழிகளை தாங்கள் கைது செய்ததாக நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அக்கும்பலிடமிருந்து சுமார் 250,000 வெள்ளி மதிப்புள்ள எட்டு கைப்பேசிகள், மடிக்கணினிகள், தங்கச் சங்கிலிகள், பெசோனா, ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் செனாத்தா ரகக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

கடந்த இரு மாதங்களாக இக்கும்பல் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக கூறிய அவர், கருப்பு நிறக் கண்ணாடி பொருத்தப்பட்ட வாடகைக்கு எடுக்கப்பட்ட கார்களில் கார் நிறுத்துமிடங்களில் வலம் வருவது இக்கும்பலின் வழக்கமான பாணியாகும் என்றார்.


Pengarang :