ECONOMYMEDIA STATEMENT

உடல் ரீதியான தொடர்பு இல்லாத சிறார் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு- போலீஸ் தகவல்

கோலாலம்பூர், செப் 27– சிறார்கள் மத்தியில் காணப்படும் விவேக கைப்பேசி மற்றும் இணைய பயன்பாடு அதிகரிப்பு காரணமாக ஆபாச காணொளிகள் அல்லது படங்களைப் பகிர்வது போன்ற சிறார்களுக்கு எதிரான தொடுதல் இல்லாத பாலியல் குற்றங்கள் எதிர்காலத்தில் அதிகரிப்பதற்குரிய அபாயம் உள்ளது.

சிறார்களுக்கு ஆபாச காணொளிகள் மற்றும் படங்களை அனுப்பப்படுவது தொடர்பில் தமது தரப்பு அதிகப் புகார்களை அண்மைய காலமாக பெற்று வருவதாக மகளிர், சிறார் பாலியல் குற்றப் புலனாய்வு துறையின் துணை இயக்குநர் ஏசிபி சித்தி கம்சியா ஹசான் கூறினார்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், இணைய வசதி ஆகியவை இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு மூல காரணமாக உள்ளதாக அவர் சொன்னார்.

இதுதவிர, கைபேசி மற்றும் இணைய வசதிகளை சிறார்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதும் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

சிறார்களுடன் பிரத்தியேக நபர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் தரப்பினர் நிர்வாணப் படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பும்படி அவர்களைக் கேட்டுக்கொள்கின்றனர். நட்பு முறியும் பட்சத்தில் அப்படங்களை அத்தரப்பினர் வெளியிட்டு விடுகின்றனர் என்றார் அவர்.

நட்புக் கொள்வது, ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பும்படி கேட்பது போன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது என தாங்கள் அஞ்சுவதாக அண்மையில் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.


Pengarang :