ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

ஜோகூர் வெள்ளம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 295 ஆக உயர்வு

ஜோகூர் பாரு, அக் 3- இன்று நண்பகல் 12.00 நிலவரப்படி ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை இந்த எண்ணிக்கை 75 பேராக இருந்தது.

திடீர்  வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் கூலாய் புதிதாக இணைந்துள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது. இம்மாவட்டத்தில்  வெள்ளத்தில் சிக்கிய 159 பேர் புக்கிட் பந்து தேசிய இடைநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் அடைக்கலம் புகுந்துள்ளதாக அது தெரிவித்தது.

நேற்று மாலை 6.30 மணியளவில் திறக்கப்பட்ட இந்த தற்காலிக நிவாரண மையத்தில் அடைக்கலம் புகுந்த அனைவரும் புக்கிட் பத்து கம்போங் மிலாயுவைச் சேர்ந்தவர்களாவர் என்று அச்செயல்குழு குறிப்பிட்டது.

நேற்று மாலை 5.30 மணியளவில் குளுவாங், சுங்கை லீனாவ் தேசிய பள்ளியில் திறக்கப்பட்ட துயர் துடைப்பு மையத்தில் கம்போங் சுங்கை லீமாவ் கிராமத்தைச் சேர்ந்த 41 பேர் தங்கியுள்ளனர்.

கம்போங் தெங்காவைச் சேர்ந்த 33 பேர் ஸ்ரீ கம்போங் ரெங்கம் தேசிய பள்ளியிலும் பெந்தியான் வட்டாரத்தைச் சேர்ந்த 62 பேர் பெந்தியான் தேசிய மலாய் பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 10.00 தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு பெய்த அடை மழை காரணமாக பொந்தியான், கூலாய் மற்றும் குளுவாங் ஆகிய மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :