ECONOMYMEDIA STATEMENT

வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலுக்கு எதிராக விழிப்புடன் இருப்பீர்- ரோட்சியா வலியுறுத்து

ஷா ஆலம், அக் 14- வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலிடம் ஏமாறாமலிருக்க வெளிநாடுகளில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு தொடர்பில் விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலை தேடுவோர் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனங்களின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை ஆராய்வது அவசியம் என்று  தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

நல்ல வருமானம் கொண்ட வேலை கிடைக்கும் என்று கண்மூடித்தனமாக உறுதியளிக்கும் நிறுவனங்களை எளிதில் நம்ப வேண்டாம். அந்த சலுகைகள் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த வேலை வாய்ப்பு மோசடிக் கும்பல் நல்ல சம்பளத்துடன் வேலை பெற்றுத் தரப்படும் என்ற ஆசை வார்த்தைகளுடன் பாதிக்கப்பட்டவர்களை குறிவைக்கிறது. இதில் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலோர் இளைஞர்கள் ஆவர் என்றார் அவர்.

ஒரு சிலர் அக்கும்பலால் அச்சுறுத்தலுக்கு ஆளான தங்கள் சகாக்களால் ஏமாற்றப்படுகின்றனர் என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.

இதற்கிடையில், அரசாங்கம் மக்களின் பயண நிபந்தனைகளை கடுமையாக்கும் அதே வேளையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் உள்துறை அமைச்சில் பட்டியலிடப்படாவிட்டால் அவர்களை வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும் ரோட்சியா வலியுறுத்தினார்.

அக்டோபர் 1 ஆம் தேதி நிலவரப்படி, கம்போடிய வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கிய மொத்தம் 261 வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.


Pengarang :