ECONOMYMEDIA STATEMENT

டீசல் மோசடிக் கும்பல் முறியடிப்பு- இரு லோரி ஓட்டுநர்கள் கைது

கோலாலம்பூர், அக் 14– ஜாலான் பூச்சோங் 6வது மைலில் உள்ள பெட்ரோல் நிலையம் மீது கடந்த புதன் கிழமை அதிரடிச் சோதனை மேற்கொண்ட அமலாக்க அதிகாரிகள் 4,000 லிட்டர் டீசல் நிரப்பப்பட்ட இரு லோரிகளைப் பறிமுதல் செய்தனர்.

மானிய விலை டீசல் மோசடி நடவடிக்கைக்கு எதிரான இந்த சோதனையில் அந்த லோரி ஓட்டுநர்களான இரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் மாநில அமலாக்கப் பிரிவுத் தலைவர் நுருள் ஷியாரினா முகமது அனுவார் கூறினார்.

அதிக டீசலை நிரம்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட அவ்விரு லோரிகளும் தினசரி காலை 8.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை தொடர்ந்தாற்போல் வந்து டீசலை நிரப்பியது கடந்த இரு வாரங்களாக தாங்கள் அங்கு மேற்கொண்ட உளவு நடவடிக்கையில் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு லோரியும் தினசரி 8,600 ரிங்கிட் மதிப்புள்ள 4,000 லிட்டர் டீசலை வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இரவு வேளையில் அந்த பெட்ரோல் நிலையம் மூடப்படுவதற்கு முன்னர் இதற்கான கட்டணம் வழங்கப்படுவது வழக்காகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அந்த பெட்ரோல் நிலையத்தின் ரசீது புத்தகங்கள், கண்காணிப்பு கேமரா மற்றும் ஆவணங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அவர்  சொன்னார்.


Pengarang :