MEDIA STATEMENTPBTSELANGOR

சுங்கை துவா தொகுதியில் கூடுதலாக 200 தீபாவளி பற்றுச்சீட்டுகள் ஒதுக்கீடு- மந்திரி புசார் தகவல்

கோம்பாக், அக் 16- இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 100 ரிங்கிட் மதிப்புள்ள மேலும் 200 ஷோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளை சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி ஒதுக்கியுள்ளது.

மேலும் அதிகமான இந்துக்கள் இந்த திட்டத்தின் வழி பயன்பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் சட்டமன்றத் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த கூடுதல் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தீபாவளியை முன்னிட்டு 400 பற்றுச்சீட்டுகள் சுங்கை துவா தொகுதிக்கு ஒதுக்கப்பட்டன. மேலும் அதிகமான குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் பயன்பெறும் வகையில் அந்த எண்ணிக்கையை நாங்கள் உயர்த்தியுள்ளோம் என மாநில மந்திரி புசாருமான அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வோராண்டும் சட்டமன்றத் தொகுதிக்கான ஒதுக்கீட்டின் வாயிலாக கூடுதல் பற்றுச்சீட்டுகளை குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு தாங்கள் வழங்கி வருவதாக அவர் சொன்னார்.

கோழி, முட்டை உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வு கண்டுள்ள நிலையில் தீபாவளிக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் அத்தரப்பினர் எதிர்நோக்கும் சுமையை இந்த பற்றுச்சீட்டு விநியோகம் ஓரளவு குறைக்கும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள ஸ்ரீ தெர்னாக் செலாயாங் பாரு பேரங்காடியில் தீபாவளி பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைச் சொன்னார்.

தீபாவளியைக் கொண்டாடும் தொகுதி மக்களுக்கு உதவும் வகையில் 400 ஷோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசாரின் தொகுதிக்கான அரசியல் செயலாளர் ஏ ரஹிம் காஸ்டி முன்னதாக கூறியிருந்தார்.

இந்த தொகுதியில் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்கள் அதிகம் வசிப்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

 


Pengarang :