ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

 கே.டி.இ.பி.டபள்யூ.எம். ஏற்பாட்டில் ஸ்ரீ மூடாவில் துப்புரவுப் பணி

ஷா ஆலம், அக் 19- இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் மீண்டும் வெள்ளம் ஏற்படாமலிருப்தை உறுதி செய்வதற்காக கால்வாய்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஆண்டு இறுதியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த துப்புரவு பணி கடந்த 16ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டதாக மாநிலத்தில் திடக்கழிவுகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள அந்நிறுவனம் கூறியது.

வெள்ள அபாயம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக ஸ்ரீ மூடா விளங்குகிறது. ஆகவே, கால்வாய்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவது மிகவும் அவசியமான நடவடிக்கையாக அமைகிறது என்று அந்நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

இந்த குடியிருப்பு பகுதியின் நான்கு மண்டலங்களில் கால்வாய்களைத் துப்புரவு செய்யும் பணியில் 60 ஊழியர்கள் ஈடுபட்டனர். குப்பைகளை அகற்றுவதற்கு ரோரோ எனப்படும் லோரிகள் மூலம் அகற்ற உதவும் 30  குப்பைத் தோம்புகள் பயன்படுத்தப்பட்டன என்றும் அது குறிப்பிட்டது.

வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் துரிதமாக செயல்படும் வகையில் தாங்கள் 500 ரோரோ லோரிகளைத் தயார் படுத்தியுள்ளதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

ஒவ்வொரு லோரியிலும் ஓட்டுநர் உள்பட மூவர் வீதம் மொத்தம் 1,500 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.


Pengarang :