ECONOMYSUKANKINI

மலேசிய கிண்ண போட்டியின் வருமானம் மறைந்த ராஜேஷ் குடும்பத்திற்கு வழங்கப்படும்- பி.ஜே.சிட்டி குழு அறிவிப்பு

கோலாலம்பூர், அக் 21- இம்மாதம் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலேசிய கிண்ண கால்பந்து போட்டியில் பெட்டாலிங் சிட்டி எப்.சி. (பி.ஜே.சிட்டி) குழுவுக்கும் ஜோகூர் டாருள் தாக்சிம் குழுவுக்கும் இடையிலான முதல் சுற்று ஆட்டத்தின் போது கிடைக்கும் டிக்கெட் வசூல் அனைத்தும் அண்மையில் சாலை விபத்தில் அகால மரணமடைந்த அக்குழுவின் ஆட்டக்காரர் ராஜேஷ் பெருமாள் குடும்பத்திற்கு வழங்கப்படும்.

பி.ஜே. சிட்டி கிளப்பிற்கு ராஜேஷ் இதுநாள் வழங்கிய பங்களிப்பை நினைவுக் கூறும் விதமாக வரும் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத் திடலில் நடைபெறும் இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அன்னாரின் குடும்பத்திற்கு வழங்க பி.ஜே.சிட்டி கிளப்பின் உரிமையாளர் டத்தோஸ்ரீ விஜய் ஈஸ்வரன் விரும்புவதாக அக்கிளப்பின் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால் கூறினார்.

முப்பத்தேழு வயதான ராஜேஷ் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் எங்கள் குழுவில் இணைந்து விளையாடியுள்ளார். அவரின் மறைவு பி.ஜே. சிட்டி குழுவுக்கு மட்டுமின்றி மலேசிய கால்பந்து துறைக்கும் பேரிழப்பாகும். திடலிலும் வெளியிலும் கட்டொழுங்குமிக்க விளையாட்டாளராக அவர் விளங்கி வந்தார் என சுபஹான் குறிப்பிட்டார்.

நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அரங்கிற்கு திரண்டு வருவர் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்த ஆட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ராஜேஷின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :