ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்தின் போது ஆற்றின் கரைகள் வலுவாக இருப்பதை உறுதிப்படுத்த மாநில அரசு நடவடிக்கை

சிப்பாங், அக் 21- கடந்தாண்டைப் போல் பெருவெள்ளம் ஏற்படும் சமயங்களில் ஆற்றின் கரைகள் வலுவுடன் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிவகைகளை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.

ஆற்றின் கரைகளின் உறுதித் தன்மையை வலுப்படுத்துவது தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொள்ளும்படி சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த பிரச்னை அனைத்து இடங்களிலும் உள்ளது. இருப்பினும் அந்தந்த இடங்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்து சீரமைப்பு பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் உள்ள ஆற்றின் கரைகள் மிகவும் நீளமானவை. ஆகவே, அவற்றைப் பராமரிப்பதற்கும் அதிகம் செலவாகிறது. இதனால் அடிக்கடி உடையும் இடங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தவிருக்கிறோம் என்றார் அவர்.

சுங்கை செமினியில் சுங்கை புவா லுவார் அருகே நேற்று “ஜியோ பேக்ஸ்“ பொருத்தும் பணியைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் இப்பகுதியில் ஆற்றின் கரை சேதமடைந்தது.

மத்திய அரசு வழங்கியுள்ள 25 லட்சம் வெள்ளி மானியத்தைக் கொண்டு ஆற்றின் கரைகளை வலுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், மாநில அரசும் இந்நோக்கத்திற்காக கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது என்றார்.


Pengarang :