ALAM SEKITAR & CUACAECONOMY

வெள்ளத்தைத் தடுக்க தாமான் கின்ராராவில் தடுப்பணை நிர்மாணிப்பு

ஷா ஆலம், அக் 21: பெட்டாலிங் மாவட்ட வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை 11 லட்சம் வெள்ளி செலவில் சுங்கை குயோ ஆற்றின் கரையை வலுப்படுத்தும் திட்டத்தை பூச்சோங்,  தாமான் கின்ராரா செக்சன் 1இல் மேற்கொண்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதமும் கடந்த மார்ச் மாதமும் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடுப்பணை நிர்மாணிப்பு அமைவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸு ஹான் கூறினார்.

ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியும் 2 மீட்டர் உயரமும் 300 மீட்டர் நீளமும் கொண்ட தடுப்பணை கட்டும் பணியும் கடந்த செப்டம்பர் 21ம் தேதி முழுமையாக நிறைவடைந்தது.

கனமழையின் போது சுங்கை குயோ நீர் தாமான் கின்ராரா குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க இது உதவும் என்று நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தவிர, கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் கோலாலம்பூர் ஜே.பி.எஸ். ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட தாமான் கின்ராராவில் உள்ள போஹோல் நீர் சேகரிப்பு குளத்தை  சுத்தப்படுத்தி ஆழப்படுத்தும் பணி கடந்த ஜூன் மாதம் முற்றுப் பெற்றதாக கின்ராரா  சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது இந்த குளம் மழைநீரை உள்வாங்கி  தாமான் கின்ராராவில் மீண்டும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க உதவியது என்று அவர் கூறினார்.

மழைக்காலம் அல்லது வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன் திட்டங்களை முடித்ததற்காக பெட்டாலிங் மற்றும் கோலாலம்பூர் ஜே.பி.எஸ்., கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஆகிய தரப்பினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :