ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில்  வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன

கோலாலம்பூர், அக் 22- வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிடைத்துள்ள நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி பலர் சொந்த ஊர்களுக்கு பயணமாகும் காரணத்தால் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மொதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.)தனது டிவிட்டர் பதிவில் கூறியது.

கோம்பாக் டோல் சாவடியில் நுழைவதற்கு முன் வாகனங்கள் மெதுவாக நகர்வதை காண முடிகிறது. கிழக்கு கரை நெடுஞ்சாலையில் கெந்திங் செம்பா சுரங்கப்பாதை தொடங்கி கிழக்கு நோக்கி செல்லும் தடத்திலும் இந்நிலை காணப்படுகிறது என அது தெரிவித்தது.

இதனிடையே புக்கிட் காம்பீலிருந்து பாகோ செல்லும் வழியின் 155.8வது கிலோ மீட்டரின் தெற்று நோக்கிச் செல்லும் தடத்தில் இன்று காலை 7.45 மணியளவில் ஏற்பட்ட விபத்து காரணமாக இடது பக்கத் தடம் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எல்.எல்.எம். குறிப்பிட்டது.

ரவாங் செலத்தான் முதல் ரவாங் வரையிலான பகுதி, சிலிம்ரிவர் முதல் சுங்கை வரையிலான பகுதி, பீடோர் முதல் தாப்பா வரையிலான பகுதி தாப்பா முதல் கோப்பேங் வரையிலானப் பகுதியிலும் வாகனங்கள் மெதுமாக நகர்கின்றன.

கிள்ளான் பள்ளத்தாக்கைப் பொறுத்த வரை எல்.டி.பி. நெடுஞ்சாலை, புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை மற்றும் சுங்கை பீசி டோல் சாவடி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Pengarang :