ECONOMYNATIONALTOURISM

சிலாங்கூரில் தீபாவளி பரபரப்புக்கு புகழ் பெற்ற ஆறு இடங்கள் 

ஷா ஆலம், அக் 27- தீமை நீங்கி நன்மையும் இருள் நீங்கி ஒளியும் ஏற்படும் திருநாளான தீபாவளி இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகிறது.

தீபாவளியை முன்னிட்டு நகரத்திற்குச் சென்று புத்தாடைகளையும் வீட்டு அலங்காரப் பொருள்களையும் வாங்குவதும் பொருள்களை வாங்கிய கையோடு குடும்பத்தோடு உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதும் சுகமான அனுபவமாகும்
பெருநாள் காலத்தில் மட்டுமின்றி எந்த நேரத்திலும் இத்தகைய சுகமான அனுபவத்தை பெறுவதற்கு ஏற்ற ஆறு இடங்களை டூரிசம் சிலாங்கூர் பட்டியலிட்டுள்ளது.

லிட்டில் இந்தியா, கிள்ளான்

ஜவுளிகள், மாலைகள், மலர்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் ருசியான உணவுகளுக்கு போன இடமாக விளங்குவது கிள்ளான் லிட்டில் இந்தியா ஆகும். எப்போதும் பரபரப்பாக இருக்கும் இச்சாலை சுற்றுப்பயணிகளை பெரிதும் ஈர்க்கும் இடமாக திகழ்கிறது. தீபாவளி பண்டிகை காலத்தில் இப்பகுதியில் தீபாவளி சந்தைகளும் நடைபெறும்.

ஜாலான் வெல்மன், ரவாங்

ரவாங் நகரில் கூட லிட்டில் இந்தியா விற்பனை மையம் ஜாலான் வெல்மன் சாலையில் அமைந்துள்ளது என்ற தகவல் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். கிள்ளான் அளவுக்கு இந்த இடம் பிரசித்தி பெற்றதாக இல்லாவிட்டாலும், இங்கும் ஜவுளி மற்றும் அலங்காரப் பொருள் கடைகள் காணப்படுகின்றன. இது தவிர, பூக்கடைகளும் பூஜை பொருள் கடைகளும் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்வதற்கு காத்திருக்கின்றன.

பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கியப் பின்னர் குடும்பதோடு அமர்ந்து உணவருந்தவும் இங்கு அறுசுவை உணவுகளுடன் பல உணவகங்கள் காத்திருக்கின்றன. ரவாங் லிட்டில் இந்தியாவுக்கு செரண்டா, பாத்தாங் காலி, செலாயாங் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தீபாவளி ஷாப்பிங்கிற்காக வருகின்றனர்.

ஸ்ரீ சக்தி ஆலயம், புக்கிட் ரோத்தான்

இந்து மதம் பற்றியும் இந்துக்களின் கலை மற்றும் கலாசாரங்களை அறிந்து பற்றியும் அறிந்து கொள்ள விரும்புவோர் கோல சிலாங்கூர், புக்கிட் ரோத்தான் ஸ்ரீ சக்தி ஆலயத்திற்கு செல்லலாம். மற்ற ஆலயங்களைப் போல் பல வர்ணங்களில் இல்லாமல் காவி நிறத்தை மட்டுமே கொண்டுள்ள இந்த ஆலயம் காண்போரை நிச்சயம் கவரும்.
இந்து சமயத்தையும் அதன் பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள விரும்புவோர் நிச்சயம் இந்த ஆலயத்திற்கு வருகை புரிவது அவசியமாகும்.

பத்து கேவ்ஸ், கோம்பாக்

நாட்டின் தலை சிறந்த சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்குவது பத்துமலை முருகன் திருத்தலம் ஆகும். பிருமாண்ட முருகப் பெருமான் சிலையும் குகையில் குடிகொண்டுள்ள முருகப் பெருமானை தரிசிக்க செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளின் அழகிய வண்ணமும் கண்களுக்கு இதமளிப்பதாக உள்ளது.

இது வழிபாட்டிற்குரிய திருத்தலமாக இருந்தாலும் தைப்பூசம், தீபாவளி போன்ற சமயங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மையமாகவும் விளங்கி வருகிறது.

யாப் கீ வாழை இலை உணவகம், கிள்ளான்

அறுசுவை உணவுகளையும் பதார்த்தங்களையும் ருசிக்காவிட்டால் தீபாவளி பண்டிகை முழுமை பெறாது. அதிலும் வாழை இலை உணவின் மகிமையைச் சொல்லத் தேவையில்லை. தென்னிந்தியாவை பாரம்பரியமாக கொண்ட இந்த வாழை இலை உணவு மலேசியர்கள் விரும்பி உண்ணும் உணவாகவும் உள்ளது.

கிள்ளான், இரயில் நிலையத்திற்கு அருகே யாப் கீ வாழை இலை உணவகம்  98 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோப்பித்தியாம் உணவகமாகும். சீன உரிமையாளரால் நடத்தப்படும் இந்த உணவகத்தில்  கிடைக்கும் வாழை இலை உணவு மலேசிய அளவில் பிரசித்தி பெற்றதாகும்.

மலிவான விலை காரணமாக மதிய உணவு வேளையில் இந்த உணவகம் மிகுந்த நெரிசலாகவும் பரபரப்பாகவும் காணப்படும். வாழை இலை உணவு தவிர பாரம்பரிய கோப்பித்தியாம் பானங்களும் இங்கு கிடைக்கும்.

சரவண பவன் உணவகம்,  பெட்டாலிங் ஜெயா

பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் சைவ உணவுக்கு பெயர் பெற்ற உணவகமாக திகழ்வது சரவண பவன் உணவகமாகும். சைவப் பிரியர்களுக்கு பிடித்தமான இடமாகவும் இந்த உணவகம் விளங்குகிறது.  வாழை இலை உணவோடு பல வகையான பதார்த்தங்களும் இங்கு கிடைக்கும்.

சீன பாணியிலான இந்திய உணவுகள் இந்த உணவகத்தின் தனிச்சிறப்பு. இந்திய உணவுக்கு மாற்றாக வேறு உணவுகளை ருசி பார்க்க விரும்புவோருக்கு இந்த உணவகம் ஏற்ற இடமாக திகழ்கிறது.


Pengarang :