ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோம்பாக் தொகுதிக்கு அமிருடின் சரியான வேட்பாளர் என்பது சேவைத் திறன் வழி நிரூபணம்- ஆதரவாளர்கள் கருத்து

அம்பாங், அக் 30- சிலாங்கூர் மந்திரி  புசாராக கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றியதன் மூலம் தனது திறமையை நிரூபித்துள்ள டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோம்பாக்  நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக் கூடிய சரியான வேட்பாளராக திகழ்கிறார் என்று கெஅடிலான் கட்சியின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

ஷெராட்டோன் நகர்வு மூலம் மக்களுக்கு துரோகமிழைத்த டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியை தோற்கடித்து தொகுதியைக் கைப்பற்றுவதற்கான பிரகாசமான வாய்ப்பினை அமிருடின் கொண்டுள்ளதாக அம்பாங் பி.கே.ஆர். இளைஞர் பிரிவுத் தலைவர் முகமது இமான் ஹஸிக் ஹமிஸி (வயது 27) கூறினார்.

இரு வேட்பாளர்களுக்குமிடையிலான போட்டி மிகவும் கடுமையானதாக இருந்த போதிலும் கட்சியின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் கடப்பாடு கொண்ட வேட்பாளரையே கோம்பாக் மக்கள் தேர்ந்தெடுப்பர் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

கேம்பாக் தொகுதியின் நிலவரத்தை நான் அணுக்கமாக கண்காணித்து வருகிறேன். நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்துள்ளார். துரோகிகள் விஷயத்தில் கோம்பாக் மக்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர்களாக உள்ளனர் என்றார் அவர்.

உண்மையைச் சொல்வதனால் தங்களுக்கு துரோகம் இழைத்த தலைவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. கடந்த பொதுத் தேர்தலில் சுங்கை துவா தொகுதியில் அதிக பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்ற அமிருடின் கோம்பாக் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது சரியான நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டார்.

பக்கத்தான் ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக ஷெரட்டோன் நகர்வு விவகாரம் தவிர்த்து அமிருடினின் வயது, பணி நெறி போன்றவை கோம்பாக் மக்களின் தேர்வாக அவர் விளங்குவதற்கு காரணமாக திகழ்வதாக கோல லங்காட் பி.கே.ஆர். மகளிர் பிரிவு பொருளாளர் அஜிசா டின் (வயது 53) கூறினார்.


Pengarang :