ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

வர்த்தக விரிவாக்கத்திற்காக 6,000 வணிகர்களுக்கு 9.23 கோடி வெள்ளி கடனுதவி- ஹிஜ்ரா வழங்கியது

ஷா ஆலம், நவ 3- இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 5,795 தொழில் முனைவோர் 9 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி கடனுதவியை யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்திடமிருந்து பெற்றுள்ளனர்.

ஹிஜ்ரா அறவாரியத்தினால் வழங்கப்படும் ஐ-பிஸ்னஸ், ஜீரோ டு ஹீரோ, நியாகா டாருள் ஏசான் (நாடி), கோ டிஜிட்டல், ஐ-லெஸ்தாரி, ஐ-பெர்மூசிம் ஆகிய ஆறு திட்டங்கள் வாயிலாக இந்த கடனுதவி  வழங்கப்பட்டதாக அதன் சந்தைப் பிரிவுத் நிர்வாகி முகமது ஏசான் முகமது ரோஸ்டி கூறினார்.

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த புதியவர்கள் மற்றும் வர்த்தகத்தில் ஏற்கவே ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த திட்டம் பெரும் நன்மையைத் தந்துள்ளது என்று அவர் சொன்னார்.

மற்ற வணிகர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்கு ஏதுவாக பெற்ற கடனை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திருப்பித் தரும்படி இத்திட்ட பங்கேற்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கடனைத் திரும்பச் செலுத்துவதில் இத்திட்ட பயனாளிகளின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரும்பச் செலுத்தும் பணத்தைக் கொண்டு புதிதாக விண்ணப்பம் செய்வோருக்கு கடனுதவி வழங்க முடியும் என்றார் அவர்.

கடனை முறையாக செலுத்தாதவர்களை கிளை அதிகாரி தொடர்பு கொண்டு நினைவூட்டுவார். சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து பணத்தை செலுத்தாதிருந்தால் கடனைத் திரும்ப பெறுவதற்கு கடன் வசூல் ஏஜெண்டின் உதவியை கடன் கட்டுப்பாட்டு பிரிவு நாடும் என அவர் விளக்கினார்.


Pengarang :