ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாரிசான், பெரிக்கத்தான் தோல்வி கண்டவர்கள்! சிறப்பான தேர்தல் கொள்கையறிக்கையை தர முடியாது- அன்வார்

கிள்ளான், நவ 3- ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட காரணத்தால் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியை விட சிறப்பான தேர்தல் கொள்கையறிக்கையை பாரிசான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கட்சிகளால் வழங்க முடியாது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வீண் விரயம் மற்றும் முறையற்ற நிர்வாகம் காரணமாக முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் மக்கள் மனத்தில் குழப்பத்தை விளைவித்ததாக ஹராப்பான் கூட்டணித் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைவர்கள் அதிகளவில் ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களால் உயர்நெறி கோட்பாட்டைத் தற்காக்க முடியும் என தாம் கருதவில்லை என்று அவர் சொன்னார். 

பெரிக்கத்தான் நேஷனல் கட்சி தனது ஆட்சி காலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீண்ட காலம் அமல்படுத்தியது மற்றும் அதிக மரண எண்ணிக்கை பதிவானது உள்பட கோவிட்-19 பிரச்னைகளைக் களைவதில் தோல்வி கண்டு விட்டது என அவர் குறிப்பட்டார்.

தடுப்பூசி விவகாரம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கொள்முதலில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதோடு அது குறித்து இன்று வரை நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவில்லை. மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய தேர்வினை வழங்கக்கூடிய ஆற்றலை அவ்விரு கட்சிகளும் கொண்டிருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இங்கு பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் கொள்கையறிக்கையை வெளியிட்ட போது அவர் இவ்வாறு சொன்னார்.

சிறந்த கோட்பாடுகளுக்குட்பட்ட நிர்வாகம் இல்லாதவரை நிறைவேற்ற இயலாத ஒரு ஆவணமாகவே தேர்தல் கொள்கையறிக்கை ஆகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முடிவே இல்லாது நீடித்து வரும் நாட்டின் அரசியல் குழப்பத்திலிருந்து நாட்டைக் காப்பதற்கு வரும் 15வது பொதுத் தேர்தலில் மக்கள் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு அமோத ஆதரவை அளித்து வெற்றிப் பெறச் செய்வதுதான் சரியான வழியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :