ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போர்ட்டிக்சனில் 65,000 லிட்டர் மானிய விலை டீசல் பறிமுதல்- நால்வர் கைது

சிரம்பான், நவ 3 -  போர்ட்டிக்சன், பாசிர் பாஞ்சாங் 18வது மைலில் டேங்கர் லோரி ஒன்றின் மீது சோதனை மேற்கொண்ட நெகிரி செம்பிலான் உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க அதிகாரிகள், 65,000 லிட்டர் மானிய விலை டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சியை முறியடித்தனர்.

இந்த நடவடிக்கையில்  139,750 வெள்ளி மதிப்புள்ள மானிய விலை  டீசல், ஒரு எண்ணெய் டேங்கர் , ஒரு லாரி  மற்றும் டீசலை மாற்றுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்கள் உள்பட மொத்தம் 11 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி  மதிப்புள்ள பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக 
அதன் இயக்குனர், முகமது ஜாஹிர் மஸ்லான் கூறினார்.

தாங்கள் சோதனை மேற்கொண்டபோது டேங்கர் லோரி ஓட்டுநர் டீசலை மற்றொரு லோரிக்கு மாற்றிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 டேங்கர் லோரியின் ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சோதனையில்  கட்டுப்படுத்தப்பட்ட  பொருட்களை கையாள்வதற்கான விநியோக கட்டுப்பாட்டாளரின் அனுமதியை அவர் கொண்டிராதது கண்டறியப்பட்டது என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவுவதற்காக 30 முதல் 50 வயதுடைய நான்கு உள்ளூர் ஆடவர்கள கைது செய்யப்பட்டதாக கூறிய முகமது ஜாஹிர், இந்த பறிமுதல் தொடர்பில்  விநியோக கட்டுப்பாடு சட்டம் 1961 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகச் சொன்னார்.

Pengarang :