ECONOMYMEDIA STATEMENTNATIONAL

15வது பொதுத் தேர்தல்- நாளை 222 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல்

கோலாலம்பூர், நவ 4– பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. மொத்தம் 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளனர். 

நாடாளுமன்றம் தவிர்த்து பேராக்கில் 59 சட்டமன்றத் தொகுதிகள், பகாங்கில் 42 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் பெர்லிசில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும்.

அதோடு சபா மாநிலத்தின் புகாயா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும்  நாளை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 222 வேட்புமனு  மையங்களில் காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும். இந்த தேர்தலுக்கான தொடக்க வாக்களிப்பு வரும் நவம்பர் 15 ஆம் தேதியாகவும் வாக்களிப்பு நவம்பர் 19 ஆம் தேதியாகவும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

நாளை தொடங்கி 14 நாட்களுக்கு தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். வரும் நவம்பர் 18 ஆம் தேதி இரவு 11.59 மணியுடன் அவர்கள் பிரசாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது நாடாளுமன்றத்தில் பக்கத்தான் வசம் 90 தொகுதிகளும் தேசிய முன்னணியிடம் 43 தொகுதிகளும் பெர்சத்துவிடம் 28 தொகுதிகளும் சரவா ஜி.பி.எஸ். கட்சியிடம் 19 இடங்களும் பாஸ் கட்சியிடம் 17 இடங்களும் வாரிசான் கட்சியிடம் 7 இடங்களும் பி.பி.எம். கட்சியிடம் 6 இடங்களும் பெஜூவாங் தானா ஆயர் கட்சியிடம் 4 இடங்களும் சுயேச்சைகளிடம் 3 இடங்களும் மூடா, பி.எஸ்.பி. மற்றும் ஸ்டார் கட்சிகளிடம் தலா ஒரு இடமும் இருந்தன.

நாடாளுமன்றத்  தேர்தலுடன் இணைந்து பேராக், பகாங் மற்றும் பெர்லிஸ் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. பக்கத்தான் வசமுள்ள சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களும்  பாஸ் கட்சியின் வசமுள்ள கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களும் முழு தவணை முடியும் வரை சட்டமன்றத்தைக் கலைப்பதில்லை என முடிவு செய்துள்ளன.


Pengarang :