ECONOMYMEDIA STATEMENTNATIONAL

துன் மகாதீர், ஜூரைடா வைப்புத் தொகையை இழந்தனர்- கோபிந்த் சிங்கிற்கு அதிக பெரும்பான்மை வாக்குகள்

கோலாலம்பூர், நவ 20- மொத்த வாக்குகளில் எட்டில் ஒரு பகுதியைப் பெற தவறிய காரணத்திற்காக வைப்புத் தொகையை இழந்த 369 வேட்பாளர்களில் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெஜூவாங் கட்சி சார்பில் லங்காவி தொகுதியில் போட்டியிட்ட மகாதீர் அந்த தொகுதியை இரண்டாம் முறையாக தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை தவற விட்டதோடு வெறும் 4,566 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத் தொகையையும் இழந்தார்.

இத்தொகுதியில் நடைபெற்ற ஐந்து முனைப் போட்டியில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 48,123 ஆகும்.

இத்தேர்தலில் வைப்புத் தொகையை இழந்த மற்ற வேட்பாளர்களில் துன் மகாதீரின் புதல்வர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரும் ஒருவராவார். அவர் ஜெர்லுன் தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் டாக்டர் அப்துல் கனி அகமதுவிட தோல்வியுற்றார்.

இத்தேர்தலில் வைப்புத் தொகையை இழந்த பிரபல வேட்பாளர்களில் தோட்டத் துறை மற்றும் மூலத் தொழில் அமைச்சர் டத்தோ ஜூரைடா கமாருடினும் தொடர்பு மற்றும் பல்லூடக துணையமைச்சர் டத்தோ ஜாஹிடி ஜைனால் அபிடினும் அடங்குவர். அம்பாங் தொகுதியில் ஜூரைடாவுக்கு 4,589 வாக்குகளும் ஜாஹிடிக்கு 1,939 வாக்குகளும் கிடைத்தன.

இதனிடையே, தலைநகரின் பத்து தொகுதியில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் தேசிய முன்னணி சார்பில் களமிறங்கிய டத்தோ கோகிலன் பிள்ளை உள்ளிட்ட எண்மர் வைப்புத் தொகையை இழந்தனர்.

மேலும், இத்தேர்தலில் அதிகப் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஹராப்பான் கூட்டணியின் கோபிந்த் சிங் டியோ விளங்குகிறார்.

டாமன்சாரா தொகுதியில் இம்முறை போட்டியிட்ட அவருக்கு 142,845 பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.


Pengarang :