ANTARABANGSAECONOMYHEALTH

நோய்த் தொற்று பரவல் குறைந்தது- கோவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது புருணை 

பண்டார் ஸ்ரீ பகவான், நவ 29- கோவிட்-19 கட்டுப்பாட்டு நடைமுறைகளில் திருத்தம் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பை புருணை நாட்டின் கோவிட்-19 வழிகாட்டுதல் குழு இன்று வெளியிட்டது. இந்த புதிய நடைமுறை வரும் டிசம்பர் 1ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது.

வரும் டிசம்பர் முதல் தேதி தொடங்கி நாட்டிற்கு தரை, கடல், ஆகாய மார்க்கமாக வரும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டுப் பயணிகள் கோவிட்-19 நோய்த் தொற்றை உள்ளடக்கிய மருத்துவ பயணக் காப்புறுதியைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று அந்த குழுவை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம், சுற்றுப்பயணிகள் தங்கள் சுய பாதுகாப்பு கருதி அந்த காப்புறுதியை எடுப்பதற்கும் தாராளமாக அனுமதிக்கப்படுகின்றனர் என அது தெரிவித்தது.

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் புருணை பிரஜைகள் தங்கள் விபரங்களை வெளியுறவு அமைச்சின் அகப்பக்கம் வாயிலாக தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

புருணைக்கு வருவோர் கோவிட்-19  சோதனைக்கு உட்பட வேண்டியதில்லை என்பதோடு தனிமைப்படுத்திக் கொள்ளவும் முழுமையாக தடுப்பூசி பெற்றதற்கான சான்றுகளை காட்டவும் தேவையில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. இந்த தளர்வுகளோடு கட்டிடங்களின் உள்ளும் வெளியிலும் முகக் கவசம் அணிவது விருப்பத் தேர்வாகவும் ஆக்கப்பட்டது.

புருணையில் கடந்த வாரம் சராசரி 643 பேர் தினமும் கோவிட்-19 நோய்க்கு இலக்காகின்றனர். அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 649 பேராக இருந்தது.


Pengarang :