ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜாலான் கெந்திங் நிலச்சரிவு- மீட்புப் பணிகளை கவனமாகவும் முறையாகவும் மேற்கொள்வீர்- பிரதமர் அறிவுறுத்து

ஷா ஆலம், டிச 16- ஜாலான் கெந்திங்- பத்தாங் காலி சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டர்களை மீட்கும் நடவடிக்கையை கவனமாகவும் முறையாவும் மேற்கொள்ளும்படி அனைத்து அரசுத் துறைகளுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பான சமீபத்திய நிலவரங்களை ஊராட்சி மேம்பாட்டு அமைச்சர், சுற்றுச் சூழல் அமைச்சர்  மற்றும் சிலாங்கூர் மந்திரி புசாரிடமிருந்து தமது தரப்பு பெற்றுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு இன்று காலை விரைவதாக  நான் அறிகிறேன். எனினும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

இந்த மீட்புப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதற்கு நான் இறைவனை வேண்டுகிறேன். இன்றிரவு சம்பவ இடத்திற்கு நான் வருகை புரியவுள்ளேன் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கோதோங் ஜெயா ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம் இயற்கை விவசாய பண்ணைக்கு அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் இதுவரை எண்மர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :