ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

திங்கள்கிழமை நாடாளுமன்றம் முன் ஒற்றுமைக் கூட்டம் நடத்த அனுமதி இல்லை- போலீஸ் திட்டவட்டம்

கோலாலம்பூர், டிச 16- ஊழியர் சேம நிதியிலிருந்து (இ.பி.எப்.) இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பண மீட்புக்கு அனுமதி கோரி வரும் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தின் எதிரே பேரணி நடத்த அதன் ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று போலீசார் கூறினர்.

இந்த பேரணியை நடத்துவதற்கு 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தின் 9(1)வது பிரிவின் கீழ் எந்த விண்ணப்பத்தையும் தாங்கள் பெறவில்லை என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹான் யாஹ்யா கூறினார்.

சட்ட விதிகளுக்கு உட்படாத அந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என பொது மக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்த பேரணியில் பங்கேற்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இந்த பேரணி தொடர்பான பிரசுரம் ஒன்று அஸ்மி பூகிஸ் என்பவருக்குச் சொந்தமான பேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ளதை தமது தரப்பு கண்டதாகவும் அவர் சொன்னார்.

வரும் திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த பேரணியில் பங்கேற்குமாறு பொது மக்களுக்கு அந்த பிரசுரம் வழி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த பேரணி தொடர்ந்து நடத்தப்பட்டால் அதன் ஏற்பாட்டார்களை போலீசார் விசாணைக்கு அழைக்கும் அதேவேளையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கையும் மேற்கொள்வர் என நோர் டெல்ஹான் எச்சரித்தார்.


Pengarang :