ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

அண்டை வீட்டுக்காரர்கள் சம்பந்தப்பட்ட 90 விழுக்காட்டுப் புகார்களுக்கு தீர்வு- எம்.பி.கே. தகவல்

ஷா ஆலம், டிச 29- இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட அசௌகர்யம் தொடர்பான 163 புகார்களுக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் தீர்வு கண்டுள்ளது.

இக்காலக்கட்டத்தில் நகராண்மைக் கழகத்திற்கு கிடைத்த 180 புகார்களில் இது 90 விழுக்காட்டைப் பிரதிபலிக்கிறது என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

அந்த 180 புகார்களும் அண்டை வீட்டுக்கார்களால் ஏற்பட்ட தொல்லைகளை சம்பந்தப்பட்டவையாகும். பூந்தொட்டிகளை வைத்து இடையூறு ஏற்படுத்துவது, சமையல் வாடை, சிகிரெட் புகை, வாகனங்களால் இடையூறு, வீட்டு வாயில் சுவர்களில் உடைகள் மற்றும் காலணிகளை உலர வைப்பது, பாடல்களால் ஏற்படும் இரைச்சல் உள்ளிட்ட புகார்களை தாங்கள் பெற்றதாக அது தெரிவித்தது. 

இந்த புகார்கள் கேட்பதற்கு மிகவும் அற்பத்தனமாக தோன்றினாலும் அண்டை அயலாருடன் நட்புறவைப் பேணுவதற்கு ஏதுவாக குடியிருப்பாளர்கள் சுத்தம் மற்றும் நல்ல நடத்தையை பேணி வர வேண்டும் நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் மூலம் கேட்டுக் கொண்டது.

இதனிடையே, வீட்டு வளாகத்தில் கட்டுமான இரும்புப் பொருள்கள் அதிக எண்ணிக்கையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தொடர்பில் தாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை புகார் ஒன்றைப் பெற்றதாகவும் நகராண்மைக் கழகம் கூறியது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகை மேற்கொண்ட நகராண்மைக் கழக அதிகாரிகள் அந்த கட்டுமானப் பொருள்களை 14 நாட்களுக்குள் அகற்றும்படி அவ்வீட்டின் உரிமையாளருக்கு உத்தரவிட்டதாக அது குறிப்பிட்டது.

குடியிருப்பாளர்களின் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் அண்டை வீட்டுக்காரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு கொசு, எலி, பாம்பு போன்ற ஐந்துகளின் உறைவிடமாகவும் மாறி விடுகிறது என நகராண்மைக் கழகம் தெரிவித்தது.


Pengarang :