ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

பத்தாங் காலி நிலச்சரிவு தொடர்பான அறிக்கை இரு மாதங்களில் பூர்த்தியாகும்- மந்திரி புசார்

ஷா ஆலம், டிச 30- அண்மையில் பத்தாங் காலி, ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பொழுதுபோக்கு முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் இரு மாதங்களில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலச்சரிவு விவகாரம் தொடர்பில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னர் மலேசிய கனிமவள மற்றும் புவி அறிவியல் துறையின் அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த அறிக்கையை ஆராயாமல் அவசரகதியில் எந்த முடிவையும் எடுக்கத் தாங்கள் தயாராக இல்லை எனக் கூறிய அவர், இத்தகைய ஆபத்து மிகுந்த பகுதிகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

அந்த நிலச்சரிவு சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய மலேசிய கனிமவள மற்றும் புவிஅறிவியல் துறையின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனினும், சம்பவம் நடந்த தினத்தன்று அப்பகுதியில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைக்கு, பொழுது போக்கு முகாம் நடவடிக்கைகளுக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. பொது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான முடிவுகளை அவசரக் கோலத்தில் எடுக்க நாங்கள் தயாராக இல்லை. அறிக்கை வரும் வரை பொறுத்திருப்போம். எனினும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய இத்தகைய பகுதிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தவிருக்கிறோம் என்றார் அவர்.

இந்த பொழுது போக்கு முகாம் பகுதியில் இரு வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலச்சரிவில் 30 பேர் உயிரிந்த நிலையில் 61 பேர் காப்பாற்றப் பட்டனர்.

கடந்த 1993ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி  உலு கிளாங்கில் உள்ள ஹைலண்ட்ஸ் டவர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விழுந்த சம்பவத்திற்கு பிறகு நிகழ்ந்த மிக மோசமான நிலச்சரிவு சம்பவம் இதுவாகும்.


Pengarang :