ECONOMYTOURISM

கோவிட்-19 பரவலைத் தடுக்க கூடுதல் நடவடிக்கைகள்- மாநில அரசு செவ்வாயன்று விவாதிக்கும்

ஷா ஆலம், ஜன 1– சீன நாட்டுப் பயணிகள் மாநிலத்திற்கு வருவதால்  கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் சாத்தியத்தைத் தடுப்பதற்கான வழி வகைகளை மாநில அரசு வரும் செவ்வாய்க்கிழமை ஆராயவிருக்கிறது.

மாநில சுகாதாரத் துறை இயக்குநர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இந்த சந்திப்பு நடத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் மீண்டும் ஏற்படக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம். ஆகவே சம்பந்தப்பட்டத் தரப்பினரை அழைத்து இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை ஆராயவிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

சீன நாட்டு சுற்றுப்பயணிகள் நோய்த் தாக்கம் அதிகம் உள்ள தரப்பினராக இருப்பதால் நாட்டிற்குள் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்காக செலங்கா அல்லது மைசெஜாத்ரா செயலியில் பதிந்து கொள்வதை கட்டாயமாக்க விரும்புகிறோம் என்றார் அவர்.

செர்டாங்கில் அமைக்கப்பட்டுள்ள ஏபிடி க்ரூ பந்தய தடத்தின் திறப்பு விழா மற்றும் ஏபிடி க்ரூ ட்ரிஃப் பந்தயத்தின் தொடக்க விழாவுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியா வரும் சீன நாட்டுப் பயணிகளுக்காக சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) அமல்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சருடன் தாம் பேச்சு நடத்தவுள்ளதாக மந்திரி புசார் கடந்த வாரம் கூறியிருந்தார். 

கே.எல்.ஐ.ஏ. மற்றும் கே.எல்.ஐ.ஏ.2 ஆகிய அனைத்துலக விமான நிலையங்களைக் கொண்டிருப்பதன் மூலம் நாட்டின் பிரதான நுழைவாயிலாக சிலாங்கூர் விளங்கும் காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

சீனாவின் ஷாங்காய் அருகே உள்ள ஷெங்ஜியாங்கில் கோவிட்-19 நோய்த் தொற்றின் கோரத் தாண்டவம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு நாளொன்றுக்கு பத்து  லட்சம் பேர் வரை அந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோய்த் தொற்றின் தாக்கத்தை தணிப்பதற்கு ஏதுவாக பொது மக்கள் குறிப்பாக முன்களப் பணியாளர்கள் ஊக்கத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.


Pengarang :