ECONOMYHEALTHMEDIA STATEMENT

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் இன்று ஆரம்பம்

ஷா ஆலம், ஜன 7- கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தை சிலாங்கூர் அரசு இன்று மீண்டும் தொடங்கவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத் தடுப்பூசிகள் மாநில மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 15 செல்கேர் கிளினிக்குகளிலும் தி கேஎல் கிளினிக்கிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் சேவை வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த தடுப்பூசியைப் பெறுவதற்கு நேரில் வந்து பதிந்து கொள்ளலாம். எனினும், 1-800-22-6600 என்ற செல்கேர் ஹாட்லைன் எண்கள் மூலம் வருகைக்கான முன்பதிவை செய்து கொள்ள பொது மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.

இந்த ஊக்கத் தடுப்பூசி 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். கடைசி கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திய ஆறு மாதங்களுக்குப் பின்னரே இந்த ஊக்கத் தடுப்பூசியைப் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

மாநிலத்திலுள்ள செல்கேர் கிளினிக்குகள் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும் எனக் கூறிய அவர், இதன் தொடர்பான மேல் விபரங்களுக்கு selcare.com எனும் அகப்பக்கத்தை நாடலாம் என்றார்.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது மாநில மக்கள்  விரைந்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்காக மாநில அரசு செவேக்ஸ் திட்டத்தை தொடக்கியது. அதனைத் தொடர்ந்து ஊக்கத் தடுப்பூசி வழங்குவதற்காக செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டமும் அமல்படுத்தப்பட்டது.

சிலாங்கூர் மாநில அரசிடம் போதுமான அளவு சினோவேக் வகை கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசிகள் உள்ளதாக சித்தி மரியா நேற்று  கூறியிருந்தார்.


Pengarang :