ECONOMYMEDIA STATEMENT

முன்னாள் விளையாட்டாளர்களுக்கு உதவ மாநில அரசு வெ.200,000 ஒதுக்கீடு

சுங்கை பூலோ, ஜன 20- குறைந்த வருமானம் பெறும் 45 முன்னாள் விளையாட்டாளர்களுக்கு உதவ மாநில அரசு 200,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநிலத்திற்கு புகழ் சேர்த்த விளையாட்டாளர்களை கௌரவிக்கும் விதமாகவும் அவர்களுக்கு சௌகர்யமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும் நோக்கிலும் “செரியா அட்லெட் சிலாங்கூர்“ (சி.ஏ.எஸ்.) எனும் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

தேசிய மற்றும் மாநில நிலையிலான பிரசித்தி பெற்ற விளையாட்டுகளில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி புகழைத் தேடித் தந்த அந்த விளையாட்டாளர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியில் தாங்கள் தற்போது ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட விளையாட்டாளர்களின் தேவையை பொறுத்து வீடு நிர்மாணிப்பு, பழுதுபார்ப்பு, உபகணங்கள் அல்லது தளவாடங்கள் வழங்குவது போன்ற வழிகளில் இந்த உதவி நல்கப்படும் என நேற்று இங்கு சி.ஏ.எஸ். திட்டத்தை தொடக்கி வைத்த போது அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் விளையாட்டாளர்கள் தெரு இசை நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகம் புரிவதற்கான இடங்களை அடையாளம் காண்பதில் தேசிய விளையாட்டாளர் நல அறவாரியத்துடன் மாநில அரசு ஒத்துழைப்பு நல்கி வருவதாக அவர் மேலும் சொன்னார்.

முன்னாள் விளையாட்டாளர்களுக்கு உதவும் எங்களின் திட்டத்திற்கு ஊராட்சி மன்றங்கள் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இந்த நிகழ்வில் அவர் முன்னாள் சைக்கிளோட்ட வீரர் முத்தலிப் மைடினுக்கு நில பட்டாவை யும் முன்னாள் எடை தூக்கும் வீரர் முகமது கோ அப்துல்லாவுக்கு மக்கள் வீடமைப்புத் திட்ட வீட்டுக்கு அனுமதி கடிதத்தையும் வழங்கினார்.


Pengarang :