ECONOMYMEDIA STATEMENT

மாற்றுத் திறனாளிகள், ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பிப்.15 முதல் இலவச இரயில் சேவை

கோலாலம்பூர், ஜன 21- வரும் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மாற்றுத் திறனாளிகள் மற்றும் 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சீருடை அணிந்த மாணவர்கள் கே.டி.எ.ம்.பி. இரயில்களில் இலவசமாக பயணிக்கலாம்.

சுபாங் ஸ்கைபார்க் முதல் கே.எல். சென்ட்ரல் வரையிலான கே.டி.எம். பயணிகள் இரயில் சேவை வரும் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஒத்தி வைக்கப்படுவதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் ஒன்றரை கோடி வெள்ளியின் மூலம் இந்த இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

நாட்டின் வடபகுதி, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கிம்மாஸ் முதல் தும்பாட் வரையிலான நகரங்களுக்கிடையிலான சேவையில் இந்த இலவச பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கிளந்தான் மாநிலத்தின் டாபோங் முதல் கோல கெரிஸ் வரை ஒரு வெள்ளி கட்டணத்தில் தினசரி பயணம் மேற்கொள்ளும் 150 மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர் என்று அவர் மேலும் சொன்னார்.

நிதி நிலையைப் பொறுத்து இத்திட்டத்தை இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கே.எல். சென்ட்ரலில் நேற்று வடக்கு நோக்கிச் செல்லும் மின்சார இரயில் பயணிகளுக்கு சீனப்புத்தாண்டு பரிசுப் பொட்டலங்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இதனிடையே, ஸ்கைபார்க் முதல் கே.எல். சென்ட்ரல் வரையிலான பயணிகள் இரயில் சேவை குறித்து கருத்துரைத்த லோக், ஆண்டுக்கு 1 ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி செலவில் கடந்த 2018 முதல் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்திற்கு பயணிகளிடமிருந்து குறைவான ஆதரவே கிடைத்து வருவதாகச் சொன்னார்.

அந்த தடத்தில் தினசரி 32 பயணச் சேவைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் 80 முதல் 100 பயணிகள் மட்டுமே அச்சேவையை பயன்படுத்துவதை தரவுகள் காட்டுகின்றன என்றார் அவர்.


Pengarang :