ECONOMYMEDIA STATEMENT

மக்காவ் மோசடி- விவசாய உதவி அதிகாரி 215,000 வெள்ளியை இழந்தார்

குவாந்தான், ஜன 21- காப்புறுதி முகவர் மற்றும் காவல் துறை அதிகாரி என கூறிக் கொண்ட நபர்களின் மக்காவ் மோசடி வலையில்  215,000 சிக்கி வெள்ளியை தாம் பறிகொடுத்ததாக விவசாய உதவி அதிகாரி ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் காப்புறுதி முகவர் எனக் கூறிக் கொண்ட நபர் ஒருவர் தன்னைத் தொடர்பு கொண்டு தாம் செய்ததாக கூறப்படும் மூன்று போலியான பணக் கோரிக்கைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார் என்று அந்த 45 வயது அதிகாரி தனது போலீஸ் புகாரில் கூறியுள்ளதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லி முகமது யூசுப் சொன்னார்.

போலியான அந்த மூன்று பணக் கோரிக்கை விவகாரம் தற்போது போலீசாரின் கவனத்திற்கு சென்று விட்டது என அந்த காப்புறுதி முகவர் கூறியுள்ளார். பின்னர் அந்த அதிகாரியை தொடர்பு  கொண்ட போலீஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்ட நபர் ஊழல் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக அந்த அதிகாரியை அச்சுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணைக்கான ஜாமீன் தொகையாக 400,000 வெள்ளியை செலுத்த வேண்டும் எனக் கூறிய அந்த போலீஸ் அதிகாரி விசாரணைக்காக வங்கி  விபரங்களையும் தரும்படி வலியுறுத்தியுள்ளார் என ரம்லி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த போலீஸ் அதிகாரி சொன்னபடி 33 தடவை பணத்தை இணையம் வாயிலாக மாற்றிய பாதிக்கப்பட்ட நபர், தாம் ஏமாற்றப்பட்டதை பின்னர் உணர்ந்து தெமர்லோ போலீஸ் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை புகார் செய்ததாக அவர் மேலும் சொன்னார். 


Pengarang :