ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் பொழுதுபோக்கு முகாம் நடத்துனர்கள் ஊராட்சி மன்றங்களில் பதிவு செய்ய வேண்டும்

சுபாங் ஜெயா, ஜன 31- சிலாங்கூரில் பொழுதுபோக்கு முகாம் நடத்துனர்கள் ஊராட்சி மன்றங்களில்  பதிவு செய்ய வேண்டும். வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலான இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

பொழுதுபோக்கு முகாம்களை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் அண்மையில் நடத்தப்பட்ட  பல்வேறு அரசு துறைகளை உள்ளடக்கிய பயிற்சிப் பட்டறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

பொழுதுபோக்கு முகாம் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து பொதுவான அனுமதி வழங்கப்படும் வேளையில் இத்தகைய முகாம்களை நடத்துவோர் சொந்த நிலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது லைசென்ஸ் விண்ணப்பத்திற்கான கட்டாய நிபந்தனையாக விதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இதற்கான விண்ணப்பங்களை செய்வதற்கு இறுதி நாள் எதுவும் தற்போதைக்கு நிர்ணயிக்கப்படவில்லை. இதன் தொடர்பான அறிவிப்பை அவ்வப்போது அறிவிப்போம் என்றார் அவர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொழுதுபோக்கு முகாமிடும் நடவடிக்கைகளுக்கான விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டி வெளியிடப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.

முப்பத்தொரு உயிர்களை பலி கொண்ட பத்தாங் காலி, ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பொழுதுபோக்கு முகாம் நிலச்சரிவு சம்பவத்தின் எதிரொலியாக மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


Pengarang :