MEDIA STATEMENT

இந்திய அரசியல், சமூகத் தலைவர்களுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

புத்ரா ஜெயா, பிப் 12- நாட்டிலுள்ள இந்திய அரசியல், சமூகத் தலைவர்கள் மற்றும் பிரதான ஆலயங்களின் பொறுப்பாளர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று சந்திப்பு நடத்தினார்.

இங்குள்ள ஸ்ரீ பெர்டானாவில் தேநீர் விருந்துடன் நடத்தப்பட்ட இந்த சந்திப்பில் பக்கத்தான் ஹராப்பான் இந்தியத் தலைவர்களோடு மஇகா பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இனங்களுக்கிடையிலான கருத்திணக்கமின்மைப் பிரச்சனையை விட பொருளாதாரம் மற்றும் நாட்டை நிர்வகிக்கும் முறை மீது தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டை மேம்படுத்துவதற்கும் ஒரு குழுவாக செயல்பட்டு நாட்டை வழிநடத்துவதற்கும் ஏதுவாக இன மற்றும் அரசியல் வேறுபாடின்றி அனைத்து நிபுணர்களின் ஆற்றலையும் பெறுவது தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் தலையாய நோக்கமாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.

முதலில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம். நாட்டின் மீதான நம்பிக்கையும் கௌவரமும் மீட்கப்படுவதை உறுதி செய்வது நமது இலக்காக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நாடு மீண்டும் எழுச்சி பெற்று மேம்பாட்டு இலக்கை அடைவதற்கு நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் உஷ்ணம் தணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் நலனுக்காகவும் அதனைப் பாதுகாப்பதற்காகவும் உண்மை மற்றும் நீதியை தற்காப்பதற்குரிய தைரியத்தை இந்நாட்டிலுள்ள இந்திய, சீன, சரவா மற்றும் சபா மக்கள் கொண்டிருப்பதே தற்போதைய தேவையாகும் என்றார் அவர்.

நாகரீக மலேசிய கோட்பாட்டிற்கேற்ப நம்பிக்கை, ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பு, அன்பு பாராட்டுவது போன்ற குணங்களைக் கொண்டிருக்கும் பட்சத்தில் நாடு ஒரு மகத்தான தேசமாக நிச்சயம் எழுச்சி காண முடியும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :