ALAM SEKITAR & CUACAPBT

பொது இடங்களில் குப்பைகளை வீசிய எண்மர் மீது எம்.பி.கே. நடவடிக்கை

ஷா ஆலம், பிப் 20- தென் கிள்ளான் வட்டாரத்தில் குப்பைகளை பொது
இடங்களில் வீசிய எண்மர் அமலாக்கப் பிரிவின் நடவடிக்கை ஆளாகினர்.
இம்மாதம் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் கிள்ளான் நகராண்மைக்
கழகத்தின் சுற்றுச்சூழல் பிரிவு இரு இடங்களில் மேற்கொண்ட “ஒப்ஸ்
ஸ்டேடிக்“ நடவடிக்கையில் அவர்களுக்கு எதிராக அபராதம்
விதிக்கப் பட்டதாக நகராண்மைக் கழகத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவு
இயக்குநர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை தாமான் செந்தோசா, ஜாலான் டத்தோ அப்துல்
ஹமிட் 5 பகுதியில் குப்பைகளை சட்டவிரோதமாக கொட்டிய 38 முதல்
59 வயது வரையிலான மூவரை அங்கு கண்காணிப்பு நடவடிக்கையை
மேற்கொண்ட அமலாக்கப் பிரிவினர் கையும் களவுமாக பிடித்து
சம்மன்கள் வழங்கினர் என்று நோர்பிஷா மாபிஷ் தெரிவித்தார்.
தாமான் செந்தோசா ஜாலான் உலுபாலாங் 29 இல் நேற்று
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் உணவு பொட்டங்களையும
குப்பைகளையும் பொது இடங்களில் வீசிய 36 முதல் 64 வயது
வரையிலான ஒரு பெண் உள்ளிட்ட ஐவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
என்று அவர் சொன்னார்.
அந்த எண்மருக்கும் எதிராக 1974 ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும்
கட்டிடச் சட்டத்தின் 47(1)(ஏ) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது
என்றார் அவர்.
குப்பைகளை கண்ட இடங்களில் வீசும் பொறுப்பற்ற நபர்களுக்கு எதிரான
அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர்
தெரிவித்தார்.
தூய்மையைப் பேணுவதில் பொறுப்புணர்வுமிக்கவர்களாக பொது மக்கள்
இருக்க வேண்டும். சமுதாயத்தில் அசுத்தத்தை ஏற்படுத்துவோர் என்ற
அவப்பெயரை அவர்கள் பெறக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :