ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பி40 பிரிவினருக்கான மத்திய அரசின் மருத்துவத் திட்டம்- சிலாங்கூருக்கு கிடைத்த அங்கீகாரம்- மந்திரி புசார் பெருமிதம்

கோம்பாக், பிப் 26- சிலாங்கூர் மாநில அரசின் சுகாதாரத் திட்டத்தைப் பின்பற்றி  மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மடாணி மருத்துவத் திட்டம் மாநில அரசுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகும் என்று  மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினர் அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப்  பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்த திட்டம் வழங்கும் என்று அவர் சொன்னார்.

அரசாங்க மருத்துவமனைகள் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சனை கூட்ட நெரிசலாகும். அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் முயற்சி மேற்கொண்டாலும் அதற்கு சிறிது காலம் பிடிக்கும். 

மருத்துவமனைகளில் நிலைமையை சீர் செய்வதற்குள் மக்கள் தொகை அதிகரிப்பு கண்டு பிரச்சனை தொடர்வதற்கான சாத்தியமும் உள்ளது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரே வழி அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையைக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் அல்லது கிளினிக்குகளில் சிகிச்சைப் பெறுவதாகும் என்றார் அவர்.

இந்த திட்டத்திற்கு பெரும் தொகையை செலவிட வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும் இதன் மூலம் அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பை பிரச்சனைக்கு தீர்வு காண இயலும் என அவர் குறிப்பிட்டார்.

உலு கிளாங் தொகுதி சேவை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டத்தை நேற்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :