ECONOMYMEDIA STATEMENT

கோல சிலாங்கூர் கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் வெப்பக் காற்று பலூன்கள்

கோல சிலாங்கூர், பிப் 26- இங்குள்ள புஞ்சா ஆலம், எக்ஸ்பிலனெட் ஈக்கோ கிராண்டியர் சதுக்கத்தில் நடைபெற்ற கோல சிலாங்கூர் மாவட்ட நிலையிலான கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் போது வானில் பறக்க விடப் பட்ட இரு ராட்சத வெப்பக் காற்று பலூன்கள் வருகையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

காலை 9.00 மணி தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு இந்த பலூன்கள் வானில் பறந்தன. முதலில் வந்த 30 பேருக்கு இந்த பலூனில் இலவசமாக பறப்பதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த பலூனில் பறப்பதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களில் அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிமும் ஒருவராவார். சுமார் 5 நிமிடங்கள் வானில் பயணித்த அவர். பின்னர் இந்த பலூன் பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இன்று மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

இந்த கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் முதன் முறையாக நாங்கள் இந்த பலூனைக் கொண்டு வந்துள்ளோம். கோல சிலாங்கூர் குறித்து பெருமைக் கொள்வதற்குரிய தனித்துவம் இதுவாகும் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில அரசின் 44 மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்த பயணத் தொடரை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த வாரம் சனிக்கிழமை கிள்ளானில் தொடங்கிய இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பத்தாங் காலியில் நடைபெற்றது. நேற்று மூன்றாவது நிகழ்வு கோம்பாக்கில் நடைபெற்ற வேளையில் நான்காம் நிகழ்வு இன்று கோல சிலாங்கூரில் நடைபெறுகிறது.


Pengarang :