ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,322ஆக உயர்வு

ஷா ஆலம், மார்ச் 4- ஜோகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி இம்மாநிலத்தில் மொத்தம் 37,322 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் 10,793 பேர் 238 துயர் துடைப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில அரசு செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.

 வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக தொடர்ந்து சிகாமாட் இருந்து வருகிறது. இங்குள்ள 77 துயர் துடைப்பு மையங்களில் 3,921 குடும்பங்களைச் சேர்ந்த 13,358 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பத்து பகாட் மாவட்டத்தில் நேற்று 2,136 ஆக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 7,136 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயற்குழுவின் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

மூவார் மாட்டத்தில் 3,300 பேரும் கோத்தா திங்கியில் 3,292 பேரும் நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று அவர் மேலும் சொன்னார்.

தங்காக் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,651ஆக உள்ள நிலையில் ஜோகூர் பாருவில் வெள்ள அகதிகள் எண்ணிக்கை 699 பேராக குறைந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

 


Pengarang :