ALAM SEKITAR & CUACAECONOMY

வெள்ளம்- சிலாங்கூரில் 107 பேர் பாதிப்பு- ஐந்து மாநிலங்களில் 40,922 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்

கோலாலம்பூர், மார்ச் 4– அண்மைய சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியிலில் சிலாங்கூர் புதிதாக இணைந்துள்ளது. 

சுங்கை பூலோ மற்றும் கோல சிலாங்கூரில் திறக்கப்பட்டுள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூருடன் சேர்த்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40,922ஆகப் பதிவாகியுள்ளது. 

ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 37,322 பேர் துயர் துடைப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு புதிதாக திறக்கப்பட்ட 13 துயர் துடைப்பு மையங்களுடன் சேர்த்து மாநிலத்தில் தற்போது செயல்படும் மொத்த நிவாரண மையங்களின் எண்ணிக்கை 238ஆக உயர்ந்துள்ளது.

சிகாமாட் மாவட்டத்தில் 3,921 குடும்பங்களைச் சேர்ந்த 13,358 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பத்து பகாட்டில் 2,136 குடும்பங்களைச் சேர்ந்த 7,368 பேரும் குளுவாங்கில் 5,288 பேரும் கோத்தா திங்கியில் 3,292 பேரும் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

பகாங் மாநிலத்தில் உள்ள 22 துயர் துடைப்பு மையங்களில் 2,317 பேர் தங்கியுள்ளனர். மலாக்கா மாநிலத்தில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 379 பேர் துயர் துடைப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :